கண்ணகி நகர் பகுதியில் அதிகாலையில் தூய்மை பணியில் மேற்கொண்ட வரலட்சுமி என்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பலியாகுவதாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
சென்னை கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழைநீரில், மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததால், பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் பலியான சம்பவம் மனதை பதைபதைக்க வைப்பதாக கூறினார். இறந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
இந்த கனத்த தருணத்தில் ஒரு கட்சித் தலைவர் என்பதைத் தாண்டி, சாதாரண குடிமகனாக மனதில் ஆயிரம் கேள்விகள் எழுவதாகவும், ஒரு நாள் மழைக்கே ஓர் அப்பாவி உயிர் பலியாகும் அளவிற்கு, ஒரு மாநிலத் தலைநகரின் நிர்வாகம் சீர்கெட்டு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஐயா எங்களுக்காகவும் குரல் கொடுங்க... சீமானிடம் கதறி அழுத தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்தினர்!

அதிலும் சென்னையில் மின்கம்பி அறுந்து விழுந்து, கடந்த 7 வாரங்களில் மட்டும் 5 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கையில், விடியல் ஆட்சியில் மின்சார வாரியம் விழித்துக் கொண்டு தான் இருக்கிறதா என்றும் ஆகஸ்ட் மழைக்கே சென்னை அல்லாடுகிறது என்றால் டிசம்பரில் தலைநகரின் கதி என்ன எனவும் மழைநீர் தேங்கினால் என்ன, மின்சாரம் பாய்ந்தால் என்ன, தெருவில் நடந்து செல்லப்போவது ஏழை, எளிய மக்கள் தானே, எக்கேடு கெட்டால் என்ன என்ற அலட்சிய எண்ணமா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு சென்னை என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், இதயத்தின் மீது விழும் எலெக்ட்ரிக் ஷாக்கையும் கவனிக்க வேண்டும் என்றார். மறைந்த தூய்மைப் பணியாளரின் குழந்தைகள் அழும் கதறலொலியைக் கேட்ட பின்பாவது, விளம்பரத்தையும் சமூக வலைத்தளத்தையும் விட்டு வெளியே வந்து, இது போல மேலும் பல உயிர்கள் காவு வாங்கப்படுவதைத் தடுக்கும் விதமாக, மழைக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு! வாழ்த்துகளை பகிர்ந்து நெகிழ்ச்சி..!