திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட இடுவாய் ஊராட்சி சின்ன காளிபாளையத்தில் உள்ள பகுதிகளில், நாள்தோறும் சேகரிக்கப்படும் ஏறக்குறைய 700 முதல் 800 டன் அளவுள்ள குப்பைகளை கொட்டும் முயற்சியை அரசு செய்து வருவதாகவும், திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு மாறாக, குப்பைகளைத் தரம்பிரிக்காமல் பொதுவெளியில் கொட்டியதற்காகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றால் ஏறக்குறைய 3.15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை சின்ன காளிபாளையத்தில் கொட்டி வந்த திமுக அரசை எதிர்த்து ஒரு மாத காலமாக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று போராட்டத்தில் பங்குபெற வந்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலையையும், பாஜக நிர்வாகிகளையும் ஏவல்துறை கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் குடியிருக்கும் பகுதியில் குப்பையை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதோடு போராடும் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய திமுக அரசுக்கு தமிழக பாஜக சார்பாக ஏற்கனவே நான் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இன்று மக்கள் போராட்டத்திற்கு பாஜகவின் ஆதரவைத் தெரிவிக்க வந்த தாமரை சொந்தங்களையும் திமுக அரசு கைது செய்திருப்பது அதன் பாசிச போக்கை அடிக்கோடிட்டு காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “ஆடு நனையுதே என யாரோ கவலைப்பட்ட மாதிரி...” - உதயநிதியை நோஸ்கட் செய்த நயினார் நாகேந்திரன்...!
அறவழியில் போராட முயன்ற தலைவர்களை சர்வாதிகார முறையில் அடக்கி ஒடுக்க முனையும் திமுக அரசுக்கு, குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த திராணியில்லையா அல்லது மனமில்லையா என கேட்டுள்ளார். மொத்தத்தில், பொதுமக்கள் நலனை தூக்கியெறிந்து, பாசிசத்தை மட்டுமே தூக்கிப் பிடிக்கும் திமுக அரசு தனது அகங்காரத்தாலேயே வீழும் நாள் தொலைவிலில்லை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உயிரற்று கிடக்கும் உயர்கல்வித் துறை...! திராவிட மாடல் வெட்கப்படனும்...! நயினார் விமர்சனம்...!