அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்தால் தான் நாட்டிற்கு பாதுகாப்பு என்பதால் நிபந்தனை இன்றி ஆதரவு தெரிவித்ததாகவும் தற்போது தாங்கள் nda கூட்டணியில் உள்ளோமா இல்லையா என்பதை நயினார் நாகேந்திரன் கூறினால் தங்களுக்கும் நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் டிடிவி தினகரன் கூறிய விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் தங்களோடு கூட்டணியில் இருந்து இன்றுவரை தங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அவர் அங்கம் வகிக்கிறார் எனவும் தெரிவித்தார்.

அவர் கூட்டணியில் தொடர்கிறார் என்றும் சந்தேகமே வேண்டாம் எனவும் தெரிவித்தார். லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்தியதாகவும் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்பதை தங்களின் நோக்கம் என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சியின் மீது மக்கள் 100 சதவீதம் வெறுப்போடு இருப்பது கண்கூடாக தெரிவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு எல்லாம் சென்று வந்திருக்கிறார் என்றும் கூறினார்.
வெளிநாடு சென்றது மற்றும் முதலீடுகள் வந்தது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை அறிக்கை வரவில்லை என்றும் வெள்ளை அறிக்கை வராது, வெற்று அறிக்கை தான் வரும் என்றும் வழக்கம் போல போய்விட்டு சும்மாதான் வருவார் எனவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: திமுக-காரங்க சம்பாதிக்கதான் சமூக நலத் துறையும் பள்ளிக்கல்வித்துறையும்! அண்ணாமலை ஆவேசம்