இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இன்று பொது வேலை நிறுத்தம்:
17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்று கூறி நாடு முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெறவிருக்கிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு, திமுக, தொமுச, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடிய உட்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். ஆளும் கட்சியான திமுகவின் தொழில் சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாது என தெரிகிறது.

இதையும் படிங்க: ரூ.7500 கோடியில் என்னென்ன திட்டங்கள்..? வெளியான முக்கிய அறிவிப்பு..!
அதே நேரத்தில் அதிமுகாவின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என்பது கவனிக்கப்படத்தக்கது. எனவே அந்த தொழில் சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவார்கள் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும் ஆட்டோ தொழிலாளர்கள், சிஐடியுவில் அங்கம் வகிப்பதால், அநேகமாக ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை. வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். நாடு முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தில் வங்கி துறையும் காப்பீட்டு துறையும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் ஓடுமா? ஓடாதா?
தமிழ்நாட்டில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பேருந்துகளை இயக்குவது குறித்து அனைத்து போக்குவரத்து மேலாண் இயக்குனர்களுக்கு போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பணிந்திர ரெட்டி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதன்படி தினசரி கால அட்டவணையின் படி எந்தவித பாதிப்பும் இல்லாமல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேருந்துகளை பணிமனைக்கு உள்ளேதான் நிறுத்தி வைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார். பேருந்துகள் இயக்கப்படுவதை தடுத்தால் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பேருந்துகள் இயக்கம் தொடர்பான தகவலை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிக்கையாக அனுப்ப வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பேருந்துகளை இயக்குவதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தவர் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்து வழிதடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

போக்குவரத்து கோட்ட அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாரியை நியமித்து பேருந்து இயக்கத்தை கண்காணிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடத்தில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவதை மேலாண் இயக்குனர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: கொஞ்சமாச்சு அக்கறை இருக்கா? கல்வித்துறை சீரழிக்கிறீங்க! வார்னிங் கொடுத்த நயினார்...