243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. தங்களது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியும், நிதிஷ்குமார் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற முனைப்புடன் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், காங்கிரஸும் கைகோர்த்து மகா பந்தன் கூட்டணியை உருவாக்கியுள்ளது. 
பீகார் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்  தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.  இரண்டு நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, மகளிருக்கு மாதம் ரூ.2,500 , ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன. 
தற்போது இன்றைய தினம் பாஜக மற்றும் ஜே.டி. கூட்டாக இணைந்து களமிறங்கும் என்.டி.ஏ. கூட்டணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,த மிழ்நாட்டிலிருந்து இந்தியாவிலேயே முதன் முதலாக கொண்டு வரப்பட்ட காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி இடம் பெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு மிகவும் பிடித்த மற்றும் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக காலை உணவு திட்டத்தை பறைசாற்றி வருகிறார். இந்நிலையில், அந்த திட்டத்தை பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் இடம் பெற வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. 
இதையும் படிங்க: மகளிருக்கு மாதம் ரூ.2,500; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை... வாக்குறுதிகளை அள்ளி வீசிய தேஜஸ்வி யாதவ்...! 
பாஜக கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,  மாணவர்களுக்கு தரமான கல்வி, காலை உணவு மற்றும் மதிய உணவும் தரமாக வழங்கப்படும் என்று கூறியிருக்கின்றது. அதேபோல ஒவ்வொரு மாவட்டந்தோறும், புதிது புதிதாக தொழில்கள் தொடங்கப்படும், தொழில் முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவதோடு, தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுவார்கள் எனக்கூறப்பட்டுள்ளது. அதேபோல் விவசாயிகள், மீன் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் ஆகியோருக்குத் தேவையான குளிர்சாத கிடங்குகள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. 
என்.டி.ஏ. கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கையை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தற்போதைய பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆகியோர் வெளியிட்டனர். ஆனால் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதுமே இருவரும் செய்தியாளர்களைச் சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே வாக்குறுதியை என்.டி.ஏ. கூட்டணியும் வழங்கியுள்ளது. ஒரு பக்கம் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என ஆர்.ஜே.டி. கூட்டணி அறிவித்துள்ள நிலையில், மற்றொரு பக்கம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என என்.டி.ஏ. கூட்டணி அறிவித்துள்ளது. இப்படி போட்டி, போட்டு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் வகையிலான தேர்தல் அறிக்கையைத் தான் இந்தியா மற்றும் என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ளன. 
 
இதையும் படிங்க: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வக்பு சட்டம் குப்பைக்கு போகும்... தேஜஸ்வி யாதவ் திட்டவட்டம்...!