நெல்லை டவுன் வ உ சி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால குருசாமி வயது 45. இவரது மனைவி ரேவதி வயது 36. பால குருசாமி பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பால குருசாமி குடும்பத்தோடு தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு கடந்த அக்டோபர் 5ம் தேதி சென்றிருக்கிறார்.
அதற்கு அடுத்த நாள் அக்டோபர் 6ம் தேதி மதியம் பாலகுருசாமி தனது வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு சாவி மூலமாக திறக்கப்பட்டு பீரோவையும் அதன் சாவி மூலமாக திறந்து உள்ளிருந்த 30 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.
மேலும் நகை இருந்த அறை முழுவதும் வீட்டில் இருந்த மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பாலகுருசாமி நெல்லை டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடக்கினர். முதல் கட்ட தகவலின் அடிப்படையில் கைரேகை நிபுணர்கள் முழுவதுமாக சோதனையை நடத்தினர்.
இதையும் படிங்க: நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!
எந்த கதவுகளும், பூட்டுகளும் உடைக்கப்படாமல் சாவியைக் கொண்டு அனைத்து பூட்டுகளும் திறக்கப்பட்டு இருப்பதால் காவல்துறையினர் சந்தேகமாகவே இந்த வழக்கை விசாரிக்க தொடங்கினர்.
5 நாட்களுக்கு மேலாகியும் வழக்கில் எதுவும் துப்பு துலங்காததால் காவல்துறையினர் அந்தப் பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமான அடிப்படையில் சம்பவம் நடந்த நேரத்தில் ஆட்டோக்காரர் ஒருவர் மட்டும் அதை வீட்டிற்குள் வந்து சென்றது தெரியவந்தது.
அந்த நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த நேரத்தில் வந்து சென்றது நெல்லை சுத்தமல்லி பகுதியைச் சார்ந்த ஆட்டோ டிரைவர் நவநீதகிருஷ்ணன் வயது 45 என்பது தெரிய வந்தது.
மேலும் அங்குள்ள நகைகளை நவநீதகிருஷ்ணன் திருடியதும் தெரிய வந்தது. காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால்...
ஆட்டோக்காரரான நவநீதகிருஷ்ணனுக்கும், கொள்ளை நடந்த வீட்டு உரிமையாளரின் மனைவி ரேவதி என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி ரேவதி நவநீதகிருஷ்ணனின் ஆட்டோவில் சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். அப்பொழுது நவநீதகிருஷ்ணனுக்கு அதிகமாக பண தேவைகள் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து நவநீதகிருஷ்ணன் ரேவதி இடம் தெரிவித்திருக்கிறார். அப்பொழுது ரேவதி தனது வீட்டில் உள்ள நகைகளை நவநீதகிருஷ்ணனுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து இருக்கிறார். ஆனால் அதில் எவ்வித சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து நவநீதகிருஷ்ணனை தனது வீட்டிற்கு வந்து பீரோவில் உள்ள நகைகளை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.
அதன் அடிப்படையில் ரேவதியின் வீட்டில் குடும்பத்தோடு வெளியூருக்கு சென்ற நேரமாக பார்த்து நவநீதகிருஷ்ணன் அவரது வீட்டிற்கு வந்து சாவியை எடுத்து தாமாகவே பீரோவை திறந்து 30 பவுன் நகைகளை திருடி இருக்கிறார். மேலும் சந்தேகம் எதுவும் தன் மீது ஏற்படக்கூடாது எனவும் காவல்துறையினர் கண்டறிய கூடாது எனவும் அந்த வீட்டில் உள்ள மிளகாய்ப்பொடியை எடுத்து அறை முழுவதும் தூவி இருக்கிறார்.
பின்னர் எதுவும் நடக்காதது போல ஆட்டோவை எடுத்துக் கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார். திருடிய 30 பவுன் நகையையும் நவநீதகிருஷ்ணன் ஒரு தனியார் நிறுவனத்தில் அடகு வைத்திருக்கிறார். அதன் மூலமும் பணமும் பெற்று இருக்கிறார். 5 நாட்களுக்கு மேல் ஆகியும் தங்களது திருட்டு சம்பவம் வெளிவராததால் இயல்பு நிலைக்குத் திரும்பிய நவநீதகிருஷ்ணன் ஆட்டோவையும் இயல்பாக ஓட்டி வந்திருக்கிறார்.
காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நவநீதகிருஷ்ணனையும், பாலகுருசாமியின் மனைவி ரேவதிக்கும் தொடர்பு இருப்பதால் காவல்துறையினர் ரேவதி இருவரையும் கைது செய்துள்ளனர்.
நெல்லையில் வீட்டு உரிமையாளரின் மனைவியே தன் வீட்டில் உள்ள நகையை கொள்ளையடிக்க ஆட்டோக்காரரை செட்டப் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: ஆணவ கொலை முயற்சி... மகள், மருமகனை துடிக்க துடிக்க வெட்டிய சாதி வெறி தந்தை... கொத்தாய் தூக்கிய நெல்லை போலீஸ்...!