நெல்லை மாவட்டம் பாப்பாகுடி பகுதியில் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாப்பாகுடி போலீசார் அவர்களை தடுக்க முயற்சித்த போது 17 வயது சிறுவன் ஒருவன் உதவி ஆய்வாளர் ஒருவரை அரிவாளுடன் வெட்ட விரட்டி இருக்கிறார். அதில் உதவி ஆய்வாளர் முருகனுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அவர்களையும் சிறுவன் வெட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் தப்பிய காவலர்கள், அங்கிருந்த வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அந்த சிறுவன் கதவை சரமாரியாக வெட்டி திறக்க முயற்சி செய்துள்ளார். தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக போலீசார் கதவின் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது அந்த குண்டு சிறுவனின் வயிற்றுப் பகுதியில் பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுருண்டு விழுந்த சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது சிறுவன் நல்ல நிலையில் இருப்பதாகவும், எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். நெல்லை மருத்துவமனையிலும் காவல்துறை உயரதிகாரிகளும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது அந்த சிறுவனுக்கு சிகிச்சை முடிக்கப்பட்டு மருத்துவமனை சாதாரண வாடுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. சிறுவனால் அரிவாளால் தாக்கப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் முருகனும் அதே மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகிறார்.