கலைஞர் கருணாநிதி, தமிழ்நாட்டில் சமூக நீதி, இடஒதுக்கீடு, மற்றும் தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் மேம்பாட்டிற்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். அவர் ஆட்சிக் காலத்தில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மற்றும் பழங்குடியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய பல முக்கியமான சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டு வந்தார். இந்தப் பின்னணியில், 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு கஸ்தூரி ரங்கன் குழுவை அமைத்தபோது, அதில் சில முன்மொழிவுகள் தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக கலைஞர் கருதினார்.
தேசிய கல்விக் கொள்கையை “மத யானை” என்று குறிப்பிட்டு, அதன் சில அம்சங்கள் தமிழ்நாட்டில் நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் சமூக நீதிக் கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரித்தார். கலைஞர் கருணாநிதி, தேசிய கல்விக் கொள்கையின் முன்மொழிவுகள் இந்த இடஒதுக்கீடு கொள்கையை பலவீனப்படுத்தலாம் என்று அஞ்சினார். குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் கட்டுப்பாடு அதிகரிப்பதால், மாநில அரசுகளின் இடஒதுக்கீடு கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று அவர் கருதினார்.

தேசிய கல்விக் கொள்கையில் முன்மொழியப்பட்ட மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை பாதிக்கலாம் என்று கலைஞர் கருணாநிதி எச்சரித்தார். தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிப்பதற்கு எதிராக, கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில் இரு மொழிக் கொள்கையை உறுதிபடுத்தியவர்.
இதையும் படிங்க: என்னை தாலாட்டி வளர்த்த தாய்மடி... திமுக இளைஞரணி குறித்து நெகிழ்ந்து பேசிய அன்பில் மகேஷ்!
கலைஞர் கருணாநிதி தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்த நாள் இன்று எனக் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்போம் என்று உறுதிப்படுத்த தெரிவித்துள்ளார். 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை கலைஞர் கருணாநிதி எடுத்துரைத்ததாக கூறினார். அவர் கொடுத்த மதயானை எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகவும், இனியும் எதிர்ப்போம் என்று தெரிவித்தார். மேலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிப்பட கூறினார்.
இதையும் படிங்க: 2340 ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி.. சீக்கிரமே நல்ல சேதி வரும்! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!