சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் கைலாய யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியுள்ள நிலையில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த தம்பதிகள் நலமுடன் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் உறவினர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த பயண ஏற்பாட்டு நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் நேபாளம் சென்று கைலாய யாத்திரை மேற்கொண்டனர். இவர்களில் 37 பேர் பயணம் செய்த இரண்டு பேருந்துகள் திடீர் வெள்ளத்தில் சிக்கியதாகவும், அதில் இருந்த 30-க்கும் மேற்பட்டவர்களை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, அதே பயண ஏற்பாட்டு நிறுவனத்தின் மூலம் நேபாளம் சென்ற மற்றொரு குழுவினர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்தக் குழுவில் சுமார் 17 முதல் 20 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த விஜி புவனேஸ்வரி மற்றும் நாவு கபிலன் என்ற தம்பதியும் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 49 பேர் மாயம்! ஏஜென்சி அலுவலகத்தில் போலீஸ் விசாரணை! தொடரும் பதற்றம்!
நேபாளத்தில் இருந்து தங்களது மகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட தம்பதி, தாங்கள் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் கிடைத்ததும் அவர்களது குடும்பத்தினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்தக் குழுவினர் கடந்த 25-ம் தேதி காத்மாண்டுவில் இருந்து மூன்று வேன்களில் சியாப்ருபேசி பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து 26-ம் தேதி காலை சீன எல்லையை நோக்கி புறப்பட்டுள்ளனர். கைரோங் நகரில் தங்குவதற்காக சென்று கொண்டிருந்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஒரு வேன் மட்டும் பாதுகாப்பாக சென்றடைந்துள்ளது. அந்த வேனில் பயணம் செய்த சுமார் 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற இரண்டு வேன்களின் நிலை குறித்து உடனடியாகத் தகவல் கிடைக்காததால், அதில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
இதனிடையே, கும்பகோணத்தில் இருந்து கைலாய யாத்திரை சென்ற 37 பேர் பயணம் செய்த பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நெய்வேலி, ஒசூர், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயணக் குழுவில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் குழுவில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
ஒருபுறம் பலரை தொடர்புகொள்ள முடியாமல் குடும்பத்தினர் பதற்றத்தில் இருக்கும் நிலையில், வேளச்சேரி தம்பதி பாதுகாப்பாக இருப்பதாக கிடைத்துள்ள தகவல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், காணாமல் போனதாக கூறப்படும் மற்ற பயணிகளின் நிலை குறித்தும் விரைவாக தகவல் கிடைக்க வேண்டும் என்பதே உறவினர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்! இந்தியாவுக்கும் காத்திருக்கும் அடுத்த ஆபத்து! பீகார், உ.பி.க்கு எச்சரிக்கை!