2019ஆம் ஆண்டு தமிழகத்தின் தஞ்சாவூரில் நடந்த ராமலிங்கம் கொலை வழக்கில் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இன்று ஒரு முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அந்தக் கொடூரமான கொலையில் ஈடுபட்ட இரு தலைமறைவாக அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மேலும் மூன்று நபர்களையும் என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அந்த பகுதியில் மதமாற்றம் குறித்து பிரசங்கம் செய்தவர்களை ராமலிங்கம் தட்டிக் கேட்டது தான் இந்தக் கொலைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் உறுப்பினர்கள் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான முகமது புர்ஹானுதீன் மற்றும் முகமது நபில் ஹசன் ஆகிய இருவரும்தான் கடந்த ஏறக்குறைய 7 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த தேடப்படும் குற்றவாளிகள் ஆவர். இவர்கள் இருவரும் சகோதர நிறுவனங்களிடமிருந்து என்.ஐ.ஏ. பெற்ற ரகசியத் தகவல்களின் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாவில் கைது செய்யப்பட்டனர். PFI தஞ்சாவூர் மாவட்ட உறுப்பினர்களான இவ்விருவரும், ராமலிங்கத்தின் கைகளை வெட்டி அவரைக் கொலை செய்ய மேலும் பலருடன் சதி செய்து, அதற்கு ஒருங்கிணைந்துள்ளனர்.
இதையும் படிங்க: "கார்த்திகை தீபம் காவித் தீபமாக மாறிவிடக்கூடாது!" மதவாத அரசியலை முதல்வர் முடியத்துள்ளார் - அமைச்சர் செழியன் அதிரடி!
இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மேலும் மூன்று நபர்களை என்.ஐ.ஏ. புதன்கிழமை அன்று கைது செய்தது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான கே. மொய்தீன், முகமது இம்ரான் மற்றும் தமீம் அன்சாரி ஆகிய மூவரும், கொலைக்குப் பிறகு தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் ஒளிந்துகொள்வதற்கும், அவர்கள் இடம் மாறுவதற்கும் உதவிகள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருவிடைமருதூர் காவல்துறையிடமிருந்து 2019 மார்ச் 7ஆம் தேதி இந்த வழக்கை என்.ஐ.ஏ. ஏற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 2019இல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குத் தலா ₹5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று வரை, இந்த ஆறு பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முகமது அலி ஜின்னா என்பவர் மட்டும் இன்னமும் தலைமறைவாகவே உள்ளார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் அதிர்ச்சி! வன்கொடுமை செய்யப்பட்டு கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட 7 வயதுச் சிறுமி சடலம்!