நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்யும் நிலை நீடித்து வருகிறது. மலை மாவட்டமான நீலகிரியில் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பர்லியாறு அருகே ஏற்பட்ட மண்சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் போக்குவரத்து கடந்த இரண்டு நாட்களாக தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது இது மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. கல்லாறு அருகே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் மலை ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்துமிக்க பகுதிகளில் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சகதிக்குள் புதைந்த அரசு பேருந்து! வாட்ஸ்அப் மூலம் உதவி கேட்ட மாணவிகள்! மீட்புப் பணியில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் போக்குவரத்து தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் மாற்றுப்பாதைகளான மேட்டுப்பாளையம் - கோத்தகிரி மற்றும் காரமடை - மஞ்சூர் சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மழை தொடரும் நிலையில் பொதுமக்கள் தேவையில்லாமல் பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆபத்தான பகுதிகளில் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு தடை நீடிப்பதால் பயணிகள் மாற்று வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மலைப்பகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவு தொடர்பான இந்த நிலவரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் ஏற்பட்ட சேதங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை குறையும் வரை சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மழைக்கு தயாராகுங்கள் மக்களே! இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது! சென்னைக்கும் அலர்ட்!