சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் விதத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் அந்த வார்டின் திமுக நகர்மன்ற உறுப்பினர். காலை நேரங்களில் குப்பைகளைச் சேகரிக்க வரும் பணியாளர்கள் விசில் ஊதுவதைத் தவிர்த்து, இனி ஒலிபெருக்கி மூலமாகவே பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அந்த கவுன்சிலர் விளக்குகையில், நமது வார்டில் அதிகாலை நேரங்களில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக வந்து குப்பைகளைச் சேகரிக்கின்றனர். அப்போது அவர்கள் எழுப்பும் அந்த விசில் சத்தம், அதிகாலையில் உறங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கும், முதியவர்களுக்கும் ஒருவித அசௌகரியத்தைத் தருவதாகத் தெரிகிறது. குறிப்பாகக் கடைகள் உள்ள பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கே இந்த விசில் சத்தம் கேட்கத் தொடங்கிவிடுகிறது. எனவே, அந்த ஊதி சத்தத்தை (Whistle sound) இனி நமது வார்டில் பயன்படுத்த வேண்டாம் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம், எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!
தொடர்ந்து பேசிய அவர், விசில் சத்தத்திற்கு மாற்றாக, பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்கக் கடைகளில் பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான ஒலிப்பான்களை (ஒலிபெருக்கி) வாங்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் கண்ணியமான முறையில் அறிவிப்பு செய்து குப்பைகளைச் சேகரிக்க முடியும். இதற்காகப் பணியாளரிடம் இருந்த விசிலை பெற்று, இனி இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்போகிறோம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம், என்றார். தூய்மைப் பணியாளர்களின் பணிச் சூழலை மேம்படுத்தவும், பொதுமக்களின் நிம்மதியான உறக்கத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விசிலைப் பெற்று குப்பை வண்டியில் போட்ட அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்!