தமிழ்நாட்டில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்காக ஒரே கட்டமாக ரூ.1,200 கோடி செலவிடப்படுவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் மத்தியில் திட்டமிட்டுப் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகவும், இது ஒரே நாளில் கொட்டப்படும் நிதியல்ல, மாறாக அடுத்த 50 ஆண்டுகால வளர்ச்சியை மனதில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்படும் எதிர்காலத் திட்டம் என்றும் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்கு எடுத்த எடுப்பிலேயே ரூ.1,200 கோடி அரசுப் பொதுப் பணத்தை ஒரே கட்டமாக வாரியிறைக்கப் போவதாகச் சிலர் கள எதார்த்தத்தை மறைத்துப் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுகின்றனர். எந்தவொரு பிரம்மாண்டமான உள்கட்டமைப்புத் திட்டமும் ஒரே இரவிலோ அல்லது ஒரே தவணையிலோ நிதியைச் செலவிட்டு முடிக்கப்படுவதில்லை; பல்வேறு கட்டங்களாக, பணிகளின் முன்னேற்றத்திற்கு ஏற்பவே நிதி விடுவிக்கப்படும் என்பது அடிப்படை நிர்வாக அறிவு உள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை" என்று சாடினார்.

மேலும், இத்திட்டத்தின் வரலாற்றுத் தேவையை அழுத்தம் திருத்தமாக விவரித்த அவர், "அரசு நிர்வாகப் பணிகளை நவீனப்படுத்துவதற்கும், வரும் காலங்களில் மக்கள் தொகை மற்றும் அரசுத் துறைகளின் பெருக்கத்திற்கு ஏற்ப அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்து மக்களுக்கு வெளிப்படையான துரித சேவை வழங்குவதற்கும் இது அவசியமாகிறது. அடுத்த 50 ஆண்டுகாலத் தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்கூட்டியே கணித்து உருவாக்கப்படும் தொலைநோக்குத் திட்டமே தவிர, குறுகிய அரசியல் லாபங்களுக்கானது அல்ல. அரசின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி அரசியலை முடக்கும் நோக்கில் பரப்பப்படும் இத்தகைய பொய்க் கதைகளை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: முடிவை மறுபரிசீலனை செய்க.. வைகோ வலியுறுத்தல்!
இதையும் படிங்க: 10 லட்சம் கோடி கடனில் ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம் எதற்கு: எடப்பாடி பழனிசாமி கேள்வி!