நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகள் விசைத்தறி தொழில் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதிகளில் விசைத்தறி தொழில் நலிவடையும் நேரங்களில் சிறுநீரக விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் பரவுகின்றன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு விசைத்தறி தொழிலாளர்கள் தங்கள் விசைத்தறி உரிமையாளர்களிடம் பெறும் முன்தொகையை செலுத்த முடியாத காலகட்டங்களில் தங்களுடைய சிறுநீரகங்களை விற்பனை செய்து முன் தொகையை செலுத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுநீரகம் விற்பனை செய்த தொழிலாளர்களே முன்வந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கூறி புகார் அளித்ததின் பேரில் நாமக்கல் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுநீரக விற்பனையில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளர்களை தூண்டிய இடைத்தரகர்களை கைது செய்ததுடன், அதன் முதன்மை தரகர்களை மற்றும் மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் தமிழக அரசு உயர் நீதிமன்றமும் உடல் உறுப்புகளை விற்பதற்கு பல நிபந்தனைகளை விதித்தது.
இதையும் படிங்க: கிட்னி வியாபார பொருளா? செல்வபெருந்தகை ஆவேசம்..!
இதனால் உடல் உறுப்புகள் விற்பனை செய்ய முடியாமல் தங்கள் உறவுகளுக்கு மட்டுமே தானமாக வழங்க கூடிய சூழ்நிலை வந்தது. ஆனால் அவற்றை மீறி பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரகம் விற்பனை நடைபெறுவதாக தகவல்கள் பரவி வருகிறது. விசைத்தறி தொழிலாளர்கள் தங்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக மைக்ரோ பைனான்ஸ் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையில் தவிப்பவர்களை அணுகி செல்வந்தர்களுக்கு சிறுநீரகம் போலிச் சான்றிதழ் மூலம் பெற்று கொடுத்ததாக தகவல்கள் பரவியது.

இதனையடுத்து நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில் பள்ளிபாளையம் பகுதியில் விசாரணை நடத்தினர். அப்பொழுது சிறுநீரக விற்பனையில் இடைத் தரகராக செயல்பட்டது ஆலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என தெரியவந்தது. அடுத்து பள்ளிபாளையம் போலீஸ் ஆனந்தன் குறித்து விசாரணை நடத்துமாறு புகார் அளித்ததன் பேரில் பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆனந்தனை தேடி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள ஆனந்தன், திருப்பூர் அல்லது சென்னையில் இருக்கலாம் என சந்தேகித்து, தனிப்படைப் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக சிறுநீரக விற்பனை என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்த சூழ்நிலையில் தற்பொழுது மீண்டும் தலை தூக்கி உள்ளதையடுத்து சென்னை சுகாதாரத்துறை சட்டபிரிவு இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் மருத்துவக்குழுவினர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணிடம் ரகசிய விசாரணை செய்து வீடியோ பதிவு மூலம் வாக்குமூலம் பெற்றனர். இதனைத் தொடர்ந்து இக்குழுவினர் குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதிகளில் சிறுநீரகம் விற்பனை செய்த நபர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற கிட்னி விற்பனை குறித்து விசாரணை நடத்த மத்திய சுகாதாரத்துறை குழு நாளை காலைக்குள் நாமக்கல் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கிட்னி வியாபார பொருளா? செல்வபெருந்தகை ஆவேசம்..!