முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விஷேஷ நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். மேலும் இக்கோயில் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இதனிடையே மண் அரிப்பு காரணமாக திருச்செந்தூர் கடற்கரையில் இருந்து அவ்வப்போது பல சிலைகள் வெளி வருகின்றன.

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்த நிலையில், அதன் பின் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 7ம் தேதி தமிழில் வேத மந்திரங்கள் ஓத, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. ஒரே நேரத்தில் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கும், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் என அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா, அரோகரா என கோஷத்தை எழுப்பி குடமுழுக்கை கண்டு களித்தனர். மேலும் டிரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கும்பாபிஷேகம் முடிஞ்சாச்சு.. இனி செந்தில்நாதனை தரிசிக்கலாம்.. போலாம் ரைட்..!
இந்நிலையில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை தினமான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். இதைத்தொடர்ந்து பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்.. திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்..!