தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் உத்திகளை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நியமித்து பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ளது. மத்திய இணை அமைச்சர்கள் இருவர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் அர்ஜுன் மேக்வால், முரளிதர் மோஹால் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பியூஷ் கோயல் இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாவார். 1964 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி மும்பையில் பிறந்த அவர், பியூஷ் வேதப்பிரகாஷ் கோயல் என்ற முழுப்பெயர் கொண்டவர். அவரது குடும்பம் அரசியல் பின்னணி கொண்டது.

தந்தை வேத் பிரகாஷ் கோயல் அட்டல் பிஹாரி வாஜ்பாய் அமைச்சரவையில் கப்பல் போக்குவரத்து அமைச்சராகவும், பாஜகவின் தேசிய பொருளாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். தாயார் சந்திரகாந்தா கோயல் மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
1984 ஆம் ஆண்டு முதல் பாஜகவில் அங்கம் வகித்து, கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்தார் பியூஷ் கோயல். 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜகவின் தகவல் தொடர்பு மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரத்தை வழிநடத்தியவர். 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றார். பிரதமர் மோடியின் தற்போதைய அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் இருந்துள்ளார். இந்த முறையும் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.