பிரதமர், முதல்வர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள் தீவிர குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்யும் மசோதா, கடந்த மழைக்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.
சிறையில் இருந்து அரசு நிர்வாகத்தை நடத்தாமல் தடுக்க இந்த மசோதா கொண்டுவரப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சபையில் ரகளை ஏற்பட்டதால், மசோதாவை ஆய்வு செய்ய பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கூட்டுக்குழுவில் உறுப்பினர்களின் பெயர்களை ஒவ்வொரு கட்சியும் தர வேண்டும் என லோக்சபா செயலக அதிகாரிகள் கேட்டனர். பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அலுவலகத்திலிருந்தும் பெயர்களை விரைவாகத் தருமாறு கேட்கப்பட்டது. பலமுறை கேட்டும் காங்கிரஸ், தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெயர்களைத் தரவில்லை. இதனால் காலதாமதம் ஏற்பட்டது. அடுத்த கூட்டத்தொடர் அறிவிப்பும் வெளியானது.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் திமுக VS தவெக இடையே தான் போட்டியே..!! அடித்துச் சொல்லும் டிடிவி தினகரன்..!!
இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு அதிரடியாக கூட்டுக்குழு அமைத்தது. ஒடிசாவைச் சேர்ந்த பா.ஜ., எம்.பி. அபராஜிதா சாரங்கி குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி. சி.வி.சண்முகம் உள்ளிட்ட 31 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். குழு விரைவில் கூடி மசோதாவை ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்லிமென்ட் வரலாற்றில் முக்கிய எதிர்க்கட்சிகள் இடம்பெறாத கூட்டுக்குழு அமைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா செயலக அதிகாரிகள் கூறியதாவது: எதிர்க்கட்சிகளை அணுக பலமுறை முயற்சி செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரிடம் பேசியும் பலன் இல்லை.
தி.மு.க.,வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, ஏ.ஆர்.எஸ்.சிவா, கனிமொழி ஆகியோரும் பதில் தரவில்லை. திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி குழுவைப் புறக்கணிப்பதாகக் கூறினார். ஆனால், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, ஏ.ஐ.எம்.ஐ.எம். எம்.பி. அசாதுதீன் ஒவைசி, அகாலி தள எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளிடம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மசோதா நிறைவேறினால் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இதையும் படிங்க: மக்கள் முடிவை ஏற்கிறோம்... ஆனால்..! காங்கிரஸ் கட்சி கொடுத்த நம்பிக்கை...!