சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11-ம் தேதி சென்னை வருகை தர உள்ள நிலையில், அவரது பயணத்தில் சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம் மட்டுமின்றி, சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் திறப்பு நிகழ்ச்சியும் முக்கிய இடம் பிடித்துள்ளது.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை 10.55 மணியளவில் சென்னை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து பூந்தமல்லி பகுதிக்கு செல்ல உள்ளார். அங்கு சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத்தின் முதல் செயல்பாட்டு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள 14.64 கிலோமீட்டர் நீள பூந்தமல்லி புறவழிச்சாலை-வடபழனி வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார். இந்த வழித்தடத்தில் முதற்கட்டமாக 11 நிலையங்களில் பயணிகள் சேவை தொடங்க உள்ளது.
மெட்ரோ தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு, பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் சாலை மார்க்கமாக சென்னை ஐஐடி வளாகத்துக்குச் செல்கிறார்.
இதையும் படிங்க: இன்னொரு 9/11 நடக்காமல் தடுத்த இந்தியர்! சுமித் ஒரு ஹீரோ! இந்திய விமானியை பாராட்டிய மோடி!

ஐஐடி வளாகத்துக்குச் செல்லும் பிரதமர், அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் வழிபாடு செய்வதுடன், ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார்.
இளையராஜாவின் இசையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், இசை, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியை ஒருங்கிணைக்கும் வகையில் செயல்பட உள்ளது. இசைக்கருவிகள், ஒலி அறிவியல், இசைக் கல்வி உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளுக்கு இந்த மையம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடித்தளம் 2024-ம் ஆண்டு அமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் சென்னை பயணம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ள நிலையில், மெட்ரோ தொடக்கம் மற்றும் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் திறப்பு ஆகியவை அக்.11-ம் தேதியின் முக்கிய நிகழ்வுகளாக அமைந்துள்ளன. நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அன்றைய தினமே டெல்லி திரும்புகிறார்.
இதையும் படிங்க: IAS கனவு காணும் இளைஞர்களே கவனம்! UPSC விழாவில் தேர்வு குறித்து பிரதமர் மோடி அட்வைஸ்!