சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் கும்மங்குடி பாலம் அருகே திருப்பூரில் இருந்து காரைக்குடி வந்த அரசு பேருந்து காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்களும், பிற வாகனங்களில் வந்தவர்களும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில்.சம்பவ இடத்தில் டிரைவர் உட்பட 8 பேர் பலியான நிலையில் படுகாயம் அடைந்த 3 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதில் 9 பெண்களும் 2 ஆண்களும் என உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
மேலும் 40 க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தவர்களை திருப்பத்தூர், மதுரை, காரைக்குடி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதிவேகமாக பேருந்துகளை இயக்கியதும் அஜாக்கிரதையாலும் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கோர விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச் செய்தியறிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். உடனடியாக மாவட்ட கலெக்டரையும், மாவட்டப் பொறுப்பு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனையும் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்” என பதிவிட்டிருந்தார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் மூன்று லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நாங்க இருக்கோம்... இலங்கைக்கு உதவிக்கரம் நீட்ட இந்தியா தயார்... பிரதமர் மோடி உறுதி...!
இந்த நிலையில், பிரதமர் மோடி இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் சிவகங்கையில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அன்பாக அழைத்த பிரதமர் மோடி..!! 2026ல் இந்தியா வருகிறார் கனடா பிரதமர்..!! காரணம் இதுதான்..!!