டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தடியடி சம்பவத்திற்குக் காரணியான பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்றும் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான முழக்கங்களை எழுப்பினர்.
நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் உள்ள காந்தி சிலை மற்றும் பிரதான வாயில் அருகே திரண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பதாகைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். நியாயமான கோரிக்கைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையைக் கொண்டு கொடூரத் தாக்குதல் நடத்தியதற்குப் பிரதமர் மோடி நாட்டினிடமும் மாணவர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்று கைது செய்யப்பட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
இதையும் படிங்க: பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!
நாடாளுமன்றத்திற்குள்ளும் நீட் விவகாரம் மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் நடவடிக்கைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கைதைத் தொடர்ந்து டெல்லி அரசியல் களத்தில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: இது உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மோடி! டெல்லி தடியடி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!