தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்து விட்டு, தூத்துக்குடிக்கு வரும் 26ம் தேதி வர உள்ளார். தொடர்ந்து, விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதையடுத்து, அவர் இரவு திருச்சிக்கு வருகிறார். 27ம் தேதி காலை பிரதமர் மோடி, திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு, ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.

இதனிடையே தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி தரப்பில் இருந்து நேரம் கேட்க உள்ளதாகவும், முக்கிய நிர்வாகிகளுடன் அவர் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. சென்னையில் நடந்த சந்திப்பில், 2026 சட்டப்பேரவை தேர்தலை அதிமுக-பாஜ இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
இதையும் படிங்க: திட்டமிட்டு காய் நகர்த்தும் மோடி. . பிரிட்டன், மாலத்தீவு பயணத்தில் காத்திருக்கும் நன்மைகள்!
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) நேற்று திருச்சி வந்தனர். அவர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, திருச்சியில் பிரதமர் மோடி தங்க உள்ள இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சி மாநகர எல்லைக்குள் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவை மீறி ட்ரோன்கள் பறக்கவிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் திருச்சி வருகை, முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளன. ட்ரோன் தடை உத்தரவு, பொது மக்களின் பாதுகாப்பையும், நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இந்த உத்தரவை மதித்து, தடையை மீறாமல் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த காலகட்டத்தில் திருச்சி மாநகரில் பொது நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு முன் மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அவமானமா இல்லையா? ட்ரம்ப் பேச்சால் மோடிக்கு நெருக்கடி.. வச்சு செய்யும் ராகுல்காந்தி, கார்கே!!