சைவ - வைணவ ஒற்றுமையை உலகிற்குப் பறைசாற்றும் இந்தச் சிவாலய ஓட்டத்தின் மகிமையை அனைவரும் அறிய வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடிதம் வாயிலாகத் தபால் துறை அமைச்சருக்குத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், தபால் துறை சார்பில் சிவாலய ஓட்டத்திற்கான சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டு, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இந்த ஆன்மீக நிகழ்விற்குக் கிடைத்துள்ளது.

இந்தச் சிறப்பு அஞ்சல் உறை கடந்த சனிக்கிழமை முதல் சிவாலயமான திருமலையில் இருந்து பெட்டகத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 11 சிவாலயங்களைக் கடந்து, இன்று 12-வது சிவாலயமான திரு நட்டாலம் திருக்கோயிலில் இந்த அஞ்சல் உறை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த அஞ்சல் உறையில் சிவாலய ஓட்டம் குறித்த வரைபடம் இடம் பெற்றுள்ளது ஒரு சிறப்பம்சமாகும்.
இதையும் படிங்க: 2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!
இந்தச் சிறப்பு அஞ்சல் உறையை பக்தர்கள் 250 ரூபாய் செலுத்தி நாகர்கோவில், மார்த்தாண்டம், குழித்துறை உள்ளிட்ட தபால் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம். தபால் துறை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் இதனை வெளியிட, சிவ பக்தர்கள் சங்கத் தலைவர் பத்மகுமார் பெற்றுக் கொண்டார். விழாவில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 12 சிவாலயங்களை 48 மணி நேரத்தில் நடந்தோ அல்லது ஓடியோ தரிசிக்கும் இந்த நிகழ்வு உலகிலேயே தனித்துவமானது. கோவிந்தா... கோபாலா.. என்ற முழக்கத்துடன் பக்தர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீன ஆக்கிரமிப்பு: ஏன் பயப்படுகிறீர்கள்? நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேச கேள்வி!