அரக்கோணம் காவனூர் பகுதியை சேர்ந்தவர் திமுக முன்னாள் இளைஞரணி தெய்வச்செயல். இவர் மீது அரக்கோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதில், நான் உள்பட 20க்கும் மேற்பட்ட பெண்களை அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் இது குறித்து வீடியோ வாயிலாகவும் குற்றச்சாட்டை வைத்தார். மேலும் அந்த வீடியோவில் பேசும் போது, என் தாய் மற்றும் தந்தையை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி திருமணம் செய்து கொண்டார்.
இதனால் என் படிப்பும் நாசமாய் போய்விட்டது. அதேபோல் என்னை போல் 20க்கும் மேற்பட்ட பெண்கள் திமுக பிரமுகர் தெய்வச்செயலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தேன். அப்போது போலீசார் என்னிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. முதலில் எப் ஐ ஆரும் பதிவு செய்யவில்லை என கூறியிருந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவி புகார் அளித்தது தொடர்பாக போலீசார் தரப்பில் பரபரப்பு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வச்செயல் என்பவரால் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில மிகைபடுத்தப்பட்ட தகவல்கள் பரவி வருகின்றன. மேற்படி சம்பவம் தொடர்பாக காலதாமதமாகவும், சில அரசியல் கட்சியினரிடம் அப்பெண் சென்று முறையிட்டதாலும் காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என செய்தி பரப்பப்படுவது உண்மைக்கு மாறானது.
இச்சம்பவம் தொடர்பாக மேற்படி பெண் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 10.05.2025 அன்றே அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்படி மனுதாரர் எதிரி தெய்வச்செயல் என்பவரை கடந்த 31.01.2025-ம் தேதி எவ்வித நிர்பந்தமுமின்றி திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததும் தெரிய வருகிறது.
இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

மேலும், தன்னை போன்ற 20 வயதுள்ள 20 பெண்கள் இவ்வழக்கின் எதிரியான தெய்வச்செயல் என்பவரது கொடூர பிடியில் சிக்கி உள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார் என சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி, மனுதாரர் தான் அளித்த வெவ்வேறு புகார்களில் தன்னை போன்று பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றுக்கொன்று பொறுத்தமற்ற தகவல்களை தெரிவித்துள்ளதோடு, அப்பெண்களைப் பற்றிய எவ்வித தகவல்களையோ, முகாந்திரத்தையோ விசாரணையின்போது தெரிவிக்கவில்லை. எனவே, இதுசம்பந்தமாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அரசியல் பிரமுகரின் உதவியாளர் ஒருவருக்கு மனுதாரரை இரையாக்க முயற்சித்ததாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளது உண்மைக்கு மாறானது. மேற்படி மனுதாரர் கொடுத்த புகார்களில் இதுபோன்ற தகவல் எதையும் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை.

மனுதாரர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுசம்மந்தமாக மனுதாரர் கொடுத்த வெவ்வேறு புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 19.05.2025 அன்று மேற்படி மனுதாரரிடம் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரணை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய அனைத்து வழிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளில் உள்ள அறிவுறுத்தல்களின் படி அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்வழக்கில் காவல்துறை சார்பில் மனுதாரருக்கு முதல் தகவல் அறிக்கை நகலினை கொடுத்தும் மனுதாரர் அதனை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் மேலும் விசாரணை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2025ல் தமிழகத்தில் நிகழ்ந்த கொலைகள் எவ்வளவு தெரியுமா? டிஜிபி சங்கர் ஜிவால் பகீர் தகவல்!!