சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலை மற்றும் இலக்கிய விருதுகளில் அரசியல் குறுக்கீடு செய்வது கண்டிக்கத்தக்கது எனச் சாடினார். அத்துடன், தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளின் சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் பரிசுடன் கூடிய ‘செம்மொழி இலக்கிய விருதுகள்’ வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த ‘சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026’ (CIBF) இன்றுடன் இனிதே நிறைவுற்றது. இந்த விழாவின் நிறைவு நாள் நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு, தமிழ் மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட 84 அரிய நூல்களை வெளியிட்டார். விழாவில் பேசிய முதல்வர், "புத்தகம் என்பது மனித இனத்தின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு சக்திவாய்ந்த கருவி" எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

டெல்லியில் சாகித்ய அகாடமி விருது தொடர்பான நிகழ்வுகள் ஒன்றிய கலாச்சாரத் துறையின் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டதாக எழுந்த செய்தியைச் சுட்டிக்காட்டிய முதல்வர், கலை மற்றும் இலக்கிய விருதுகளில் அரசியல் குறுக்கீடு செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று எச்சரித்தார். இதனை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ளும் வகையில், தேசிய அளவில் இலக்கியத்தைப் போற்றும் ஒரு புதிய திட்டத்தை அவர் அறிவித்தார். அதன்படி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஓடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்குத் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'செம்மொழி இலக்கிய விருதுகள்' வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "அமித்ஷாவை கண்டாலே ஸ்டாலினுக்கு நடுக்கம்! "முதல்வரை விமர்சித்த வானதி சீனிவாசன்!
இந்த சர்வதேச புத்தகத் திருவிழாவின் மூலம் தமிழ் இலக்கியங்கள் உலகமெங்கும் கொண்டு செல்லப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தொடக்கத்தில் 24 நாடுகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், தற்போது 102 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு 1260 தமிழ் நூல்களைப் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகி இருப்பது ஒரு வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படுகிறது.
விழாவில் 'திசைதோறும் திராவிடம்', 'முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்' உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழகம் முதலீடுகளுக்கு மட்டும் சிறந்த இடமல்ல, அறிவைப் பகிர்ந்து கொள்வதிலும் முன்னோடி மாநிலம் என உலகப் பிரதிநிதிகளிடம் முதல்வர் முழங்கினார். அடுத்த முறையும் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் அமையும் என்றும், அப்போது இன்னும் பிரம்மாண்டமாகப் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். விழாவில் கர்நாடக எழுத்தாளர் பானு முஷ்டக், அமைச்சர்கள் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல் செல்லும் முதல்வர் ஸ்டாலின்! ₹1082 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்.. களைகட்டும் ஏற்பாடுகள்!