சென்னை: தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வெற்றிகரமாக வழங்கப்பட்டு விட்டது. ஆனால் சிலர் இன்னும் பெறாத நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி ரேஷன் கார்டு தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தை சீராக நடத்துவதற்காக ரேஷன் கடைகளில் டோக்கன் முறை கடைபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வீடு வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு, அதன்படி அவர்கள் தங்கள் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு சென்று பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தை பெற்றுக்கொண்டனர். இதனால் பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஏழை எளிய மக்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது.
இதையும் படிங்க: திமுக வேணவே வேணாம்! விஜய் கூட பரவாயில்லை!! ராகுல்காந்திக்கு காங்கிரசார் எழுதிய கடிதம்!

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு தற்போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, சுமார் 90 சதவீத ரேஷன் அட்டைதாரர்கள் இந்த பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கத்தை பெற்று முடித்து விட்டனர். மீதமுள்ள சுமார் 10 சதவீத குடும்பங்கள் (சுமார் 22 லட்சம் குடும்பங்கள்) இன்னும் பெறாத நிலையில், அவர்களுக்காக அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ரேஷன் கடை வட்டாரங்கள் தெரிவிப்பின்படி, நாளை மறுநாள் (திங்கட்கிழமை, ஜனவரி 19, 2026) முதல் விடுபட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு (பச்சரிசி, சர்க்கரை, கரும்பு) மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும். இதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கனை எடுத்துச் சென்று தங்கள் ரேஷன் கடையில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், அடுத்து வரும் அறிவிப்பு வரை இந்த விநியோகம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விடுபட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் டோக்கனுடன் விரைவில் ரேஷன் கடைக்கு சென்று பரிசை பெற்றுக்கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? யாருடன் கூட்டணி!! ராகுல் காந்தி முடிவு என்ன? டெல்லியில் இன்று ஆலோசனை!