தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் உரையாற்றும்போது, தேர்தல் காலத்தில் அள்ளிவீசப்படும் வாக்குறுதிகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். ஆட்சி அமைப்பதற்காக ஓட்டு வாங்கும் நோக்கில் பல வாக்குறுதிகள் கொடுக்கப்படுவதாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்தபின் அவை முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது மூன்று சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையை உதாரணமாக எடுத்துக்காட்டினார். தேர்தலில் ஜெயிப்பதற்காக மக்களிடம் பெரிய வாக்குறுதிகளை அள்ளிவீசுவது சரியல்ல என்றும், கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அழுத்தம் தந்தார்.

முடியாது என்றால் ஏன் வாக்குறுதி கொடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றுவதுதான் ஆட்சியாளர்களின் கடமை என்று வலியுறுத்தினார். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினால், மக்கள் அமைதியாக பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அடுத்த தேர்தலில் அதற்குரிய பதிலை அவர்கள் சொல்வார்கள் என்று தெளிவாக எச்சரித்தார்.
இதையும் படிங்க: மெட்ரோவை மட்டும் பார்க்காதீங்க... மேட்டூரையும் பாருங்க! முதலமைச்சருக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை!
தேர்தல் காலத்தில் ஒருவித நிலைப்பாட்டையும், ஆட்சிக்கு வந்தபின் வேறுவித நிலைப்பாட்டையும் எடுப்பது மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் செயல் என்று அவர் குறிப்பிட்டார். மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான விஷயங்களில் உண்மையான செயல்பாடுகள் தேவை என்றும், வெறும் வாக்குறுதிகளால் மட்டும் ஆட்சி நடத்த முடியாது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தனது உரையில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கனிம வளங்களுக்காக குமரியை அழிப்பதா.? தவெக அரசுக்கு வேல்முருகன் சரமாரி கேள்வி..!