தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதமாக அடுத்த 5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் கொட்டும் மழை.. ஆட்டம் காட்டும் சூறைக்காற்று.. ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி..!

அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மே 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 20ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளான நீலகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மே 20ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிமை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகளை பொறுத்தவரை, இன்று முதல் 20ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதையும் படிங்க: அக்னி நட்சத்திரம் ஆஃப்.. இடி, மழையுடன் கொட்ட காத்திருக்கும் மழை.. வானிலை மையம் ஜில் அப்டேட்..!