பாமகவின் மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தற்போதைய தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையேயான உள்கட்சி மோதலால் உருவான சர்ச்சையாகும்.பாமக கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமான மாம்பழம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த குழப்பம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கீடு செய்து, அதற்கான கடிதத்தை அவரது முகவரிக்கு அனுப்பியிருந்தது.
இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்யவும், சின்னத்தை தனது முகவரிக்கு ஒதுக்க உத்தரவிடவும் கோரப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் ராமதாஸ் தரப்பின் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதனால், கட்சியின் உள் பிரச்சினையை சிவில் நீதிமன்றத்தில் தீர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், சில கட்டங்களில் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டதும், சின்னத்தை முடக்கக்கோரிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டதும் நிகழ்ந்தன.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், மாம்பழ சின்னத்தை தற்காலிகமாக முடக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் முடிவு தவறானது என்றும் வாதிடப்பட்டுள்ளது. பாமக சின்னம் தொடர்பான வழக்கில் சிவில் நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவில் நீதிமன்றம் அடுத்த மூன்று நாட்களுக்குள் வழக்கை விசாரிக்க முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி..! அதிருப்தியில் MLA அருள்..!! கட்சியை விட்டு விலக இருப்பதாக தகவல்..!!
மாம்பழ சின்னம் அன்புமணி தரப்புக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு முறையிட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் ஆவணம் அடிப்படையில் கட்சி எங்களிடம் இருக்கும்போது சின்னமும் எங்களுக்கே என்று அன்புமணி தரப்பு வாதிட்டது. இதற்கு எதிர்தரப்பு வாதங்களை ராமதாஸ் தரப்பு முன்வைத்தது. அப்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி அழுத்துவதில் மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் நகைச்சுவையாக கருத்து தெரிவித்தது.
இதையும் படிங்க: யாருடன் கூட்டணி?... முக்கிய முடிவெடுத்த ராமதாஸ்... அறிவிப்பு குறித்து ஜி.கே.மணி சொன்ன அதிரடி தகவல்...!