விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸின் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கருவி, ராமதாஸ் பொதுவாக அமர்ந்து செய்தியாளர்களைச் சந்திக்கும் இருக்கையின் அருகே, மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் முதன்முதலில் வீட்டு ஹாலை சுத்தம் செய்யும் போது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. கருவி விலை உயர்ந்த, அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டது என்றும், இது லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் ராமதாஸ் தரப்பு தெரிவித்தது.
இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டவுடன், ராமதாஸ் தரப்பு ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகி, கருவியை சென்னைக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், இந்த கருவி மிகவும் நவீனமானது என்றும், இதன் மூலம் உரையாடல்கள் சென்னையில் உள்ள சிலருக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரியவந்தது.
இதையும் படிங்க: #BREAKING மீண்டும் அதிர்ச்சியில் ராமதாஸ்... பதறியடித்துக்கொண்டு போலீசிடம் ஓடிய உதவியாளர்... பிண்ணணியில் அன்புமணி ஆதரவாளரா?

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், விழுப்புரம் மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து, சைபர் கிரைம் ஏடிஎஸ்பி தினகரன் தலைமையில் ஒரு தனிப்படை, கிளியனூர் காவல் ஆய்வாளர் கலையரசி மேற்பார்வையில் விசாரணையைத் தொடங்கியது. விசாரணையின் ஒரு பகுதியாக, ராமதாஸின் வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள், உதவியாளர்கள், மற்றும் பாதுகாவலர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும், வீட்டைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள், கடந்த இரண்டு மாதங்களாக ஆய்வு செய்யப்பட்டன.
இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தவர் தனது மகன் அன்புமணி என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். உலகில் தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி தான், என்று கூறி, அன்புமணி தன்னைச் சந்திக்க வேண்டாம் என்று 100 மாவட்டச் செயலாளர்களைத் தடுத்ததாகவும், இதனால் புதிய செயலாளர்களை நியமித்ததாகவும் தெரிவித்தார் ராமதாஸ்.
அதுமட்டுமல்லாது ராமதாஸின் செல்போன் மற்றும் வைஃபை மோடம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமதாஸ் வீட்டின் மோடம் கோட்டகுப்பம் டிஎஸ்பி உமா தேவியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஹேக் செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனியும் மாணவர்கள் மரணம் தொடரக்கூடாது... தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்