ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில், கோவில் ஊழியரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றதாகவும், அதில் முட்டை கலந்த கேக் வெட்டப்பட்டதாகவும் கூறப்படும் தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகவும், இந்து சமயத்தின் முக்கிய புனிதத் தலமாகவும் விளங்கும் ராமநாதசுவாமி கோவிலுக்கு, தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கும், முன்னோர்களுக்கான தர்ப்பணச் சடங்குகளை மேற்கொள்வதற்கும் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், கோவிலில் தூர்வை பணியாளராக பணியாற்றி வரும் சேதுபிரியா என்பவரின் பிறந்தநாள், கோவில் வளாகத்தில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிகழ்வில் கேக் வெட்டப்பட்டதுடன், கோவில் இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் சில ஊழியர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING அதிபயங்கரம்... கூட்டு பாலியல் தொல்லை செய்யப்பட்ட 3 வயது பச்சிளம் குழந்தை பலி...!!

மேலும், வெட்டப்பட்ட கேக்கில் முட்டை கலந்திருந்ததாக கூறப்படுவதால், பக்தர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. கோவில் வளாகம் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் தனிநபர் விழாக்கள் அல்லது பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்தக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ள நிலையில், அவை மீறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனுடன், கோவில் முகவரியை பயன்படுத்தி உணவு விநியோக செயலி மூலம் அசைவ உணவு ஆர்டர் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு ஆர்டர் நகலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தகவல்களும் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு உரிய புனிதத் தலமான ராமநாதசுவாமி கோவிலில், இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: விடிந்ததுமே அடுத்தடுத்து அதிர்ச்சி... 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... காமுகன் மீது பாய்ந்தது போக்சோ...!