ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் கடலோர மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்குச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையிலான கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றிவளைத்து தடுத்து நிறுத்தினர்.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த புரோகார் என்பவருக்குச் சொந்தமான அந்தப் படகில் இருந்த ஒன்பது மீனவர்களையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மத்தியாஸ், மோபிஸ், அபிஸ்டன், ஆண்டனி புரூட்ஸ், எபிஸ்டன், ஸ்டீவன்சன், ஜான் ஜேசன், ஆண்டனி பிரதீப், சுபார்தன் உள்ளிட்ட இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரைச் சேர்ந்தவர்கள். அவர்களை நெடுந்தீவு கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக இலங்கைத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி ராமேஸ்வரம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் பரவியதும், மீனவர்களின் குடும்பத்தினர் கடும் கவலையில் ஆழ்ந்தனர். ஏற்கனவே பலமுறை இதேபோன்ற கைதுகள் நடைபெற்று, படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதால், மீனவர் சமூகத்தினர் மத்தியில் அச்சமும் அதிருப்தியும் அதிகரித்துள்ளது. பாரம்பரியமாக பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்து வரும் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக மீனவர் அமைப்புகள் வருத்தம் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... அக்.15ல் INDIA கூட்டணி ஆர்ப்பாட்டம்..! மாணிக்கம் தாகூர் பேட்டி..!!
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் தூதரக ரீதியாக விரைவான நடவடிக்கை எடுத்து, கைது செய்யப்பட்ட ஒன்பது பேரையும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பச் செய்ய வேண்டும் என்றும், படகை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!