திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி.க்கும், தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றுவதற்காக தன்னிடம் மெழுகுவர்த்தி வழங்காமல், காங்கிரஸ் எம்.பி. கிருஷ்ணகிரி திலக்கிடம் வழங்கியதால் ஆத்திரமடைந்த திருவெறும்பூர் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ, மெழுகுவர்த்தியை கீழே தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.
இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில், கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதீப் தயாள், முசிறி எம்எல்ஏ விக்னேஷ், மணப்பாறை எம்எல்ஏ கதிரவன், திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜய், மாநிலங்களவை உறுப்பினர் கிருஷ்ணகிரி திலக் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மணப்பாறை எம்எல்ஏ கதிரவன் மற்றும் முசிறி எம்எல்ஏ விக்னேஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
இதனைத் தொடர்ந்து, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கிருஷ்ணகிரி திலக் குத்துவிளக்கு ஏற்ற வந்தபோது, திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜய், “நான் ஏற்றுவதற்கு முன்பாக எப்படி ஏற்றலாம்?” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது, விளக்கு ஏற்றுவதற்காக வைத்திருந்த மெழுகுவர்த்தியை அவர் கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜய் குத்துவிளக்கு ஏற்றினார். எனினும், மாநிலங்களவை உறுப்பினர் கிருஷ்ணகிரி திலக் குத்துவிளக்கு ஏற்றாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்தச் சம்பவம் கூட்டணிக் கட்சியினரிடையே மட்டுமின்றி, தமிழக வெற்றிக் கழகத்தினரிடையேயும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.பி. கிருஷ்ணகிரி திலக் குத்துவிளக்கு ஏற்றவிடாமல், திருவெறும்பூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ மெழுகுவர்த்தியைத் தட்டிவிட்ட சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.