சென்னையில் காலநிலை மாற்றம் காரணமாக இனிவரும் காலங்களில் மேக வெடிப்பு (Cloudburst) போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னை மாநகரம் மீண்டும் ஒருமுறை வெள்ளத்தில் மூழ்கிவிடாமல் தடுக்க, பேரிடர் மேலாண்மை வல்லுனர் திருப்புகழ் தலைமையிலான குழு அளித்த வெள்ளத்தடுப்பு அறிக்கையை அரசு உடனடியாக வெளிப்படையாக வெளியிட்டு, அதன் பரிந்துரைகளின்படி மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை முழுவீச்சில் மேம்படுத்த வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர மழைப்பொழிவு விவரங்களைச் சுட்டிக்காட்டி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வரலாறு காணாத வகையில் அதீத கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. அதிகபட்சமாகப் பாரிமுனையில் 36.34 செ.மீ, கத்திவாக்கத்தில் 34.44 செ.மீ, சென்னை சென்ட்ரலில் 27.45 செ.மீ, திருவொற்றியூரில் 22.41 செ.மீ மற்றும் எண்ணூரில் 21.58 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், கத்திவாக்கத்தில் ஒரே ஒரு மணி நேரத்தில் மட்டும் 15 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டியுள்ளது. அதேபோல் மீனம்பாக்கம், சாத்தங்காடு ஆகிய இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீட்டருக்கும் கூடுதலாகவும்; பாரிமுனை, திருவொற்றியூர், எண்ணூர், கார்கில் நகர் ஆகிய இடங்களில் 10 செ.மீ-க்கு சற்று குறைவான அளவிலும் மழை பதிவாகியுள்ளது. இது நடைமுறையில் மேக வெடிப்புக்கு இணையான அளவிலான தீவிர மழைப்பொழிவாகும்.
இதையும் படிங்க: சென்னை கனமழைக்கு மேகவெடிப்பு காரணமல்ல: வானிலை ஆய்வு மையம் திட்டவட்டம்!
காலநிலை மாற்றத்தின் காரணமாகச் சென்னையில் மேக வெடிப்பு போன்ற அபாயகரமான சூழல்கள் எதிர்காலத்தில் உருவாகும் என்றும், அதைச் சமாளிக்கும் வகையில் வெள்ளத்தடுப்பு மற்றும் வடிகால் கட்டமைப்புகளைப் பலப்படுத்த வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. நேற்றைய அதிதீவிர மழைப்பொழிவு அதனை மெய்ப்பித்துள்ளது. மேலும் நடப்பாண்டில் எல்-நினோ தாக்கமும் நீடிப்பதால் நிலைமை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது.

சென்னையில் வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, 2021 நவம்பரில் அமைக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை வல்லுனர் திருப்புகழ் தலைமையிலான உயர்நிலைக் குழு, சுமார் 17 மாதங்கள் தீவிர கள ஆய்வுகளை மேற்கொண்டு 2023 மார்ச் மாதத்தில் தனது இறுதி அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் மொத்தம் 161 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.
ஆனால், இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 43 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், அந்த அறிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. முந்தைய திமுக ஆட்சியில் 101 பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டதே தவிர, அந்த 161 பரிந்துரைகள் என்ன, அதில் செயல்படுத்தப்பட்டவை எவை என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை.
திமுக ஆட்சி முடிந்து தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் அதே வெளிப்படைத்தன்மையற்ற நிலைதான் தொடர்கிறது. உலகம் எதிர்கொள்ளும் காலநிலை மாற்றத்தால் இனிவரும் காலங்களில் இதைவிடக் கடுமையான மழை பொழியக்கூடும். எனவே, இனியும் தாமதிக்காமல் திருப்புகழ் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு, அதில் கூறப்பட்டுள்ள அறிவியல் பூர்வமான பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னையின் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!