தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில், சிவாயம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கல் குவாரி தொடர்பான முறைகேடுகளை விசாரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவராக ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ எம். பழனியாண்டி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி சேனலின் நிருபர் ஈ. கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் எஸ். செபாஸ்டின் ஆகியோர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் இயங்கும் கல் குவாரியில் சட்டவிரோதமாகக் கல் வெட்டுதல், சுற்றுச்சூழல் விதிகள் மீறல் போன்றவை குறித்து செய்தி சேகரிக்கச் சென்றனர். அவர்களுடன் சில சமூக ஆர்வலர்களும் இணைந்திருந்தனர்.

குளித்தலை-மணப்பாறை சாலையில் சுமார் 25 முதல் 50 பேர் கொண்ட கும்பல் செய்தியாளர் குழுவை சுற்றி வளைத்ததாக கூறப்பட்டு உள்ளது. அவர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி இருந்ததாகவும் வீடியோ கேமரா, லைவ் டிரான்ஸ்மிட்டிங் உபகரணம், டிரோன், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்து உடைத்து விட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான ஆதாரங்கள் அவ்வப்போது வெளிவந்து வருகின்றன. இதில் எம்எல்ஏ பழனியாண்டி கேமராவை பிடுங்கி செய்தியாளரை தாக்குவது போன்ற காட்சிகள் வெளியாகின. இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!
பல்வேறு அரசியல் கட்சியினரும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் எம்எல்ஏ பழனியாண்டியை கைது செய்ய வேண்டும் என்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குளித்தலை போலீசார் பாரபட்சமாக செயல்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதனை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: விட்ருங்க… விட்ருங்க..! கதறிய நிருபர்… இரக்கமின்றி தாக்கிய MLA குரூப்..! அதிமுக கண்டனம்..!