நாட்டின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரைச் சாலையில் நடைபெற்ற கோலாகலமான விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சரியாக காலை 8.00 மணிக்கு ஆளுநர் கொடியேற்றியபோது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை ஆளுநருக்கு அளிக்கப்பட்டது.

திறந்தநிலை வாகனத்தில் சென்றபடி முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஆளுநர் பார்வையிட்டார். இந்த விழாவில் ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். முப்படைகளுடன் இணைந்து தமிழகக் காவல்துறையின் பல்வேறு பிரிவுகள், என்.சி.சி மாணவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் கண்கவர் அணிவகுப்பும் நடைபெற்றது.
இதையும் படிங்க: மெரினாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கொடியேற்றம்: தமிழகத்தில் 77-வது குடியரசு தின விழா சிறப்புகள்!
இந்த விழாவின் ஒரு பகுதியாக, வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது மற்றும் காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், உளவுத்துறை மற்றும் சிறப்புச் செயல்பாடுகளில் சிறப்பாகப் பணியாற்றிய 44 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு "முதலமைச்சரின் பதக்கங்களை" வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு துறைகளின் சாதனைகளை விளக்கும் 25 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மற்றும் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் கடற்கரைச் சாலையை விழாக்கோலம் பூணச் செய்தன.
இதையும் படிங்க: சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க.. ரூட் மாறுது..!! இந்த 4 நாள் இப்படி தான் இருக்குமாம்..!!