ஒடிசா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ள நிலையில், இதன் தாக்கத்தால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை உள்பட வட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் சார்பில் மூத்த விஞ்ஞானி முனைவர் வி.ஆர்.துரை வெளியிட்டுள்ள தினசரி வானிலை அறிக்கையின்படி, நிலப்பரப்பில் நிலவி வந்த தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது இன்று காலை வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தற்போது தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு உள் ஒடிசா பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் மற்றும் கூடலூர் பஜார் பகுதிகளில் தலா 30 மி.மீ (3 செ.மீ) மழை பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக, இன்று (செப்டம்பர் 25) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: வங்கக்கடல் காற்றழுத்தம் கரையை கடந்தது! சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தொடர்ந்து நாளை (செப்டம்பர் 26) மற்றும் செப்டம்பர் 28 ஆகிய தேதிகளிலும் வட தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான கடல் சீற்ற எச்சரிக்கையைப் பொறுத்தவரை, இன்று (செப்டம்பர் 25) தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், நாளை (செப்டம்பர் 26) முதல் செப்டம்பர் 29 வரை தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு எவ்வித எச்சரிக்கையும் இல்லை எனவும், கடல் சூழல் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!