மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (செப்டம்பர் 23) இரவு வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் கலிங்கப்பட்டினம் அருகே கரையைக் கடக்கக்கூடும் என்றும், இதன் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் சார்பில் விஞ்ஞானி முனைவர் வி.ஆர்.துரை வெளியிட்டுள்ள விரிவான வானிலை அறிக்கையின்படி, மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, இன்று இரவு விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே கலிங்கப்பட்டினம் அருகே கரையைக் கடக்கவுள்ளது. மேலும், இந்த அமைப்பின் மையப்பகுதியிலிருந்து தாய்லாந்து வளைகுடா வரை மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் வழியாக வளிமண்டலக் கீழடுக்குக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை ஒன்று சுமார் 7.6 கி.மீ உயரம் வரை நீடிக்கிறது.

இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை (செப்டம்பர் 23 மற்றும் 24) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்திலான பலத்த தரைக்காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மிதமான மழை நீடிக்கக்கூடும். தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!
கடல் சீற்றம் மற்றும் சூறாவளிக் காற்று எச்சரிக்கையைப் பொறுத்தவரை, மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 24 மாலை வரை மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பரப்பில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், ஆழ்கடல் மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதி மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: HIGH ALERT..! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! தூத்துக்குடி உட்பட 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!!