பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் திருவோணப் பண்டிகையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாரம்பரிய அறுசுவை 'ஓண சத்யா' விருந்து, இம்முறை பக்தர்களுக்கு வழங்கப்படாமல் வெறும் 'புலாவ்' மட்டுமே பரிமாறப்பட்ட சம்பவம் ஐயப்ப பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கடுமையான அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவோண நட்சத்திர தினத்தை முன்னிட்டு நடை திறக்கப்படும் சபரிமலை சன்னிதானத்தில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு வாழை இலையில் பலவகையான காய்கறிப் பதார்த்தங்கள், அவியல், பாயாசம் உள்ளிட்ட பாரம்பரிய ஓண சத்யா விருந்து வெகுவிமரிசையாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு அன்னதான மண்டபத்திற்கு வந்த பக்தர்களுக்குப் பாரம்பரிய சத்யா விருந்துக்குப் பதிலாகச் சாதாரணமாகப் புலாவ் மட்டுமே வழங்கப்பட்டது. அதேநேரத்தில், திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு மட்டும் தேவஸ்தான மெஸ் கூடத்தில் தனியாகச் சிறப்பு ஓண சத்யா விருந்து தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்திலிருந்து பல மைல் தூரம் விரதமிருந்து தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உருவானது. நிதி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட தாமதம், முன்கூட்டியே உணவுக்கான மூலப்பொருட்களைத் தயார் செய்யாத நிர்வாகக் குளறுபடி மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமே இந்த குளறுபடிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நிம்பா மறைவு: உகாண்டா மக்கள் ஆழ்ந்த சோகம்!
இந்த விவகாரம் காட்டுத்தீ போல் பரவி பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து விளக்கம் அளித்த திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு தலைவர் கே.ஜெயக்குமார், தேவஸ்தான நிதியில் முறைகேடுகளைத் தவிர்க்கவே ஸ்பான்சர்கள் இன்றி அரசு செலவிலேயே உணவு தயாரிக்கப்பட்டதாகவும், ஊழியர்களுடன் சேர்த்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் சத்யா உணவு வழங்கப்பட்டதாகவும் கூறி இக்குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
எனினும், காலம் காலமாக நடைமுறையில் இருந்த புனிதமான வழிபாட்டு வழக்கத்தை மாற்றியமைத்ததாகக் கூறி தேவஸ்தான நிர்வாகத்திற்கு எதிராக இந்து அமைப்புகளும் பக்தர்களும் தொடர்ந்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு!