தமிழ்நாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை, உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய மாநிலக் காவல்துறை டி.ஜி.பி-க்கு உத்தரவிடக் கோரி அமலாக்கத்துறை முன்னதாக மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் அமலாக்கத்துறை தலையிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள தமிழக அரசு, இந்த வழக்கை டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய அதிரடிச் சோதனையில், சுமார் 28 மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி 987 ஹெக்டேர் பரப்பளவில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டது கண்டறியப்பட்டது. இதன் சந்தை மதிப்பு சுமார் 4,730 கோடி ரூபாய் என்றும், ஆனால் அரசு கணக்கிற்கு வெறும் 36.45 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக வந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக 15 மணல் குவாரி நிறுவனங்களின் 130 கோடி ரூபாய் வங்கி இருப்பை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்தத் தரவுகளின் அடிப்படையில் மாநிலக் காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: ஜன.6ல் தமிழக அமைச்சரவை கூட்டம்... முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை...!
இருப்பினும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அமலாக்கத்துறையின் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெறும் யூகத்தின் அடிப்படையிலானவை என்றும், நம்பகத்தன்மை அற்றவை என்றும் சாடியுள்ளது. "அமலாக்கத்துறை ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டது என்பதற்காகவே வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை; மேலும் மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதே சட்டவிரோதமானது" எனத் தமிழக அரசு வாதிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு வரும் ஜனவரி 23-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றத் தமிழக அரசு முயன்று வருவது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய மாநகராட்சி, நகராட்சிகளில் எத்தனை வார்டுகள்? தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!