மத்திய அரசு, சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இந்தத் திட்டம், 2018-இல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாகும், இது மாநிலங்களில் கல்வி உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர் பயிற்சி, மாணவர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்டவற்றிற்கு நிதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், தமிழகம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்காததால், குறிப்பாக மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மறுத்ததால், இந்த நிதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 2.2 லட்சம் ஆசிரியர்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படுவதாக சசிகாந்த் செந்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்காததைக் கண்டித்து, திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் 2025 ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்தப் போராட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு பார்வையாளர் கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதம், மத்திய பாஜக அரசின் நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட பாரபட்சத்திற்கு எதிரான ஒரு அறவழிப் போராட்டமாக அமைந்துள்ளது.

உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சசிகாந்த் செந்திலின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரதத்தை அங்கேயும் தொடர்ந்தார். இந்த நிலையில் சசிகான் செந்தில் இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றினர்.
இதையும் படிங்க: முடியவே முடியாது! சசிகாந்த் செந்தில் விடாப்பிடி…மருத்துவமனையிலும் உண்ணாவிரதம்
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், சசிகாந்த் செந்திலின் உடல் நிலையை மருத்துவர்கள் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகாந்த் செந்திலை மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ நேரில் சந்தித்த நலம் விசாரித்தார்.
இதையும் படிங்க: ஒரு எம்.பி பேசுற பேச்சா இது? விண்வெளிக்கு முதல்ல போனது அனுமனா! விளாசிய கனிமொழி..!