நியூடெல்லி, ஜனவரி 6: தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மருத்துவ சிகிச்சை தேவை என்ற காரணத்தை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரின் கொடூர தாக்குதலால் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர், துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 105 சாட்சிகளிடம் விசாரணை நடத்திய சிபிஐ, விரைவாக செயல்பட்டு மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது இவ்வழக்கு மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கொளுந்துவிட்டு எரிந்த அபார்ட்மெண்ட்!! அலறித்துடித்த உயிர்கள்! மனைவி, மகளுடன் தீயில் கருகிய இன்ஜினியர்!

இந்நிலையில், வழக்கின் முதல் குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவ காரணங்களைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்தினா மற்றும் உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு, மருத்துவ சிகிச்சைக்காக ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இத்தீர்ப்பு சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று காத்திருக்கும் பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினரும், மனித உரிமை ஆர்வலர்களும் இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வழக்கின் மற்ற குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் விசாரணை பாதிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் போலீசார் மீதான குற்றச்சாட்டுகளை உலக அளவில் கொண்டு சென்றது. இவ்வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுவாக எழுந்து வருகிறது.
இதையும் படிங்க: நெருங்கும் பொங்கல் விழா... 22 ஆயிரம் கூடுதல் பேருந்துகள்... போக்குவரத்து கழகம் அறிவிப்பு...!