விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள முத்துசாமிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முத்துசாமிபுரம் பகுதியில் குருநாதன் என்பவருக்குச் சொந்தமான கீர்த்திக் ரிஷி என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. மினி நாக்பூர் உரிமம் பெற்றுள்ள இந்த ஆலையில் சோர்சா வெடி உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆலையில் 30-க்கும் மேற்பட்ட உற்பத்தி அறைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு உற்பத்தி அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ வேகமாக பரவியதால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் பதற்றத்துடன் வெளியே ஓடி உயிர் தப்பினர்.
இதையும் படிங்க: சிவகாசியில் மீண்டும் சோகம்! சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 2 தொழிலாளர்கள் உடல்கருகி பலி!

இந்த விபத்தில் காக்கிவாடன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (55) என்ற தொழிலாளி தீக்காயங்களுடன் படுகாயமடைந்தார். தகவல் அறிந்த போலீசார் மற்றும் சக தொழிலாளர்கள் அவரை உடனடியாக மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆலையின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட தகவலின்படி, பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட உராய்வு அல்லது வேதிப்பொருள் வினை காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொழிலாளர் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலி கழுத்தை அறுத்துக் கொலை! தற்கொலை போல சித்தரித்த காதலன் கைது!