தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் வலயப் (NCR) பகுதிகளில் குறிப்பிட்ட இரண்டு நாட்கள் மட்டுமே சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்ட பசுமை பட்டாசுகளை (Green Crackers) வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது.
அதேவேளையில், குளிர் காலத்தில் தலைநகரில் ஏற்படும் அபாயகரமான காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் நவம்பர் 9-ஆம் தேதி முதல் அப்பகுதியில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள என்சிஆர் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத் தொடக்கத்திலும், தீபாவளிப் பண்டிகையின் போதும் காற்று மாசுபாடு மிக மோசமான நிலைக்குச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!
அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது மற்றும் வாகனப் புகையுடன் பட்டாசுப் புகையும் இணையும் போது, ஒட்டுமொத்தப் பிராந்தியமும் நச்சுப் புகைக் கூட்டத்தால் சூழப்பட்டுப் பொதுமக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட கடுமையான சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

இதன் காரணமாக டெல்லியில் பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மக்களின் மத வழிபாட்டு உணர்வுகள் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்தும் வகையில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீபாவளிப் பண்டிகையின் போது டெல்லி மற்றும் என்சிஆர் பிராந்தியங்களில் இரண்டு நாட்கள் மட்டுமே மக்கள் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுவார்கள். அந்த நாட்களிலும் கூட, அரசு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட குறைந்த புகையை உமிழும் 'பசுமை பட்டாசுகளை' (Green Crackers) மட்டுமே விற்பனை செய்யவும், வெடிக்கவும் வேண்டும்; நச்சு ரசாயனங்கள் கலந்த பாரம்பரிய பட்டாசுகளுக்கு அனுமதி கிடையாது.
மேலும், பண்டிகைக் கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பிறகு காற்றின் தரம் மேலும் சீர்குலைவதைத் தடுக்கும் வகையில், வரும் நவம்பர் 9-ஆம் தேதி முதல் டெல்லி-என்சிஆர் முழுவதும் எவ்விதப் பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது என முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை டெல்லி அரசு, தில்லி காவல் துறை மற்றும் என்சிஆர் எல்லைக்குட்பட்ட அண்டை மாநில நிர்வாகங்கள் மிகக் கடுமையான முறையில் அமல்படுத்த வேண்டும் என்றும், விதிமீறி பட்டாசுகளை விற்பனை செய்வோர் மற்றும் வெடிப்போர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளுங்கள்.. சிஜேபி போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் வார்னிங்!!