சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் வடபழனி - பூந்தமல்லி வழித்தடத்தை மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைக்கத் தமிழகம் வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் வரவேற்றதாகவும், அதிமுக ஆட்சியில் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கப்பட்ட திட்டமே இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் திட்டத்தின் பின்னணியை நினைவுகூர்ந்த அவர், எனது தலைமையிலான அதிமுக அரசு இருந்தபோதுதான் இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களால் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தொடக்கத்தில் மத்திய அரசின் நிதி வராத சூழல் நிலவியபோதும், பணிகளைத் தாமதப்படுத்தாமல் மாநில அரசின் நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து தொடங்கி வைத்தது நமது அதிமுக அரசுதான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!
மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டிற்கான முயற்சிகளை விவரித்த அவர், மாண்புமிகு பிரதமர் அவர்களைப் பலமுறை நான் டெல்லியில் நேரில் சந்தித்து இத்திட்டத்திற்கான நிதி குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தினேன். நமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும், ரூ.63,246 கோடி ஒதுக்கீடு செய்ய கடந்த 2024-ஆம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்புதலை வழங்கியது. அதன் அடிப்படையில், இன்றைய தினம் வடபழனி - பூந்தமல்லி வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அதிமுக ஆட்சியில் நாம் விதைத்த நல்விதைகள், தற்போது விருட்சமாக வளர்ந்து நிற்பதைக் காணும்போது சொல்லொணா மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ரீதியான ஏமாற்று விளம்பரங்களைக் கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, இந்த பழனிசாமி நினைத்திருந்தால் மெட்ரோ மேம்பாலத்தின் மீது கூலிங் கிளாஸ் அணிந்து ஒரு போட்டோஷூட்டும், சுரங்கப்பாதைக்குள் பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்து ஒரு ரீல்ஸ் வீடியோவும் எடுத்திருக்க முடியும்; ஆனால், அப்படிப்பட்ட மலிவான விளம்பர ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருபோதும் துளியும் உடன்பாடு கிடையாது என்று சாடியுள்ளார்.
மேலும், நாம் வாயால் பேசக் கூடாது; நம்முடைய வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்கள்தான் பேச வேண்டும் என்பதை எப்போதும் உறுதியாக நம்புபவன் நான். தற்போது தமிழகத்தில் யாருடைய ஆட்சி இருந்தாலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உன்னதமான திட்டங்கள்தான் தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டிருக்கின்றன என்ற பெருமிதத்தை இத்திட்டங்கள் நமக்குத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றன என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இறுதியாக, தலைநகர் சென்னையின் அடுத்தகட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பாராட்டுக்குரிய வகையில் அயராது உழைத்துவரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: EVM-களில் சீல் இல்லை! தேர்தல் முறைகேடு! ஆளுங்கட்சி மீது அதிமுக இன்பதுரை குற்றச்சாட்டு!