ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஷாலினி என்ற 12 ஆம் வகுப்பு மாணவி அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளார். அவரை சேரல் கோட்டையைச் சேர்ந்த முனியராஜ் என்பவன் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் வழிமறித்து தன்னை காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார் முனியராஜ். அவரின் காதலை ஏற்க மாணவர் ஷாலினி மறுத்ததாக தெரிகிறது. மாணவியை தொடர்ந்து காதல் தொந்தரவு கொடுத்து வந்த முனியராஜ் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
பெண்கள் வாழமுடியாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதுதான் திமுக ஆட்சியின் சாதனை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். பட்டப்பகலில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது என்றும் அன்புமகள் ஷாலினியை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதலை கூறுவதாகவும் தெரிவித்தார்.

திராவிட மாடல் திமுக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல், வன்கொடுமை, படுகொலை, நகை பறிப்பு உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவிற்குச் சட்டம் ஒழுங்கு முற்று முழுதாகச் சீரழிந்துள்ளது என்றும் நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, கும்மிடிப்பூண்டி பள்ளிச்சிறுமி பாலியல் வன்கொடுமை, கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை என்று அடுத்தடுத்து தொடரும் பெண்கள் மீதான கொடுமைகளின் உச்சமாகத் தற்போது இராமேசுவரத்தில் பட்டப்பகலில் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் கொந்தளித்தார்.
இதையும் படிங்க: முதியோர் இல்லத்தை இடிப்பதா? மனசாட்சியே இல்லையா... சீமான் காட்டம்...!
திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பெண்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுக்கும் துணிவு சமூக விரோதிகளுக்கு எங்கிருந்து வருகின்றது என்றும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் திமுக அரசு அதனை அலட்சியம் செய்வது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். திமுக அரசு நடத்தும் நாடகம் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரப்போகிறது என்றும் அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படை காரணமான மதுக்கடைகளை மூடுவதற்குத் திமுக அரசிற்கு இன்னும் என்ன தயக்கம் என்றும் கேட்டார். மாணவி ஷாலினியை பட்டப்பகலில் படுகொலை செய்த கொடூரன் முனியராஜ் மீதான வழக்கு விசாரணையை காலம் தாழ்த்தாமல், அதிவிரைவாகக் கடும் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் வாழ்வை அழித்து அமைப்பது தொழிற்பேட்டைகளா? கல்லறைகள்… சீமான் விளாசல்…!