பாமக பிரமுகரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம. க. ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவருடன் சென்ற இரண்டு பேரை அறிவாளால் வெட்டி நிகழ்வு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பாமகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், பாமக மாநில நிர்வாகி ம.க.ஸ்டாலின் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார். திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது என்றும் கூறினார்.

கடந்த 2024 ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2024 ஆம் ஆண்டு மே மாதம் காங்கிரசு கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே ஜெயக்குமாரும், ஜூலை மாதம் 3 ஆம் நாள் அதிமுக கொண்டாலம்பட்டி பகுதிச்செயலாளர் சண்முகமும், ஜூலை 16 ஆம் நாள் நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு தொகுதி துணைச்செயலாளர் சி.பாலசுப்ரமணியமும், ஜூலை 27 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட பாஜக கூட்டுறவு அணிச் செயலாளர் செல்வகுமாரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இவையெல்லாம் கடந்த 2024 முதல் ஓராண்டிற்குள் நடந்த படுகொலைகள் மட்டுமே. நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரசு, கம்யூனிஸ்ட், விசிக பிரமுகர்களும் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்துள்ளது என பட்டியலிட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: பாமக பிரமுகர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி.. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம கும்பல்..!
பொதுவாழ்வில் ஈடுபடும் மக்கள் பிரதிகளுக்கே உரிய பாதுகாப்பில்லாத திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும் என்றும் திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா எனவும் அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா என்ற ஐயத்தை எழுப்புகிறது என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை., பட்டப்பகலில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க முடியவில்லை., மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாடக்கூட முடியவில்லை., இதெற்கெல்லாம் காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார் என்றும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெரும் பதற்றம்… ம.க ஸ்டாலின் மீதான கொலை முயற்சி! டயர்களை கொளுத்தி போராடும் பாமகவினர்