சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டு பேசினார். அப்போது, காமராஜர் குறித்து கலைஞர் கருணாநிதி கூறியதாக சிலவற்றை திருச்சி சிவா பகிர்ந்து கொண்டார். மின் பற்றாக்குறை குறித்து தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டனம் தெரிவித்து இருந்தார். இருந்தாலும் அவருக்கு குளிர்சாதன வசதி இல்லையென்றால், உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதற்காக அவர் தங்கும் விடுதி உட்பட அனைத்து அரசு பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்த கருணாநிதி உத்தரவிட்டதாக கூறினார்.
அவசரநிலை காலத்தில் காமராஜரை கைது செய்ய மத்திய அரசு முயன்றபோது, திருப்பதி செல்வதற்காக காமராஜர் திட்டமிட்டிருந்தார். திருப்பதி சென்றால், காமராஜரை கைது நடவடிக்கையில் இருந்து தன்னால் காப்பாற்ற முடியாது என்று கூறியதாக கருணாநிதி கூறியதாக பேசினார். மேலும், காமராஜரின் உயிர்பிரிகையில், கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு, நாட்டையும் ஜனநாயகத்தையும் கருணாநிதி காப்பாற்ற வேண்டும் காமராஜர் சொன்னதாக பேசி இருந்தார்.

இந்த நிலையில் திருச்சி சிவாவின் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். காமராஜர் உயிரோடு இல்லை என்பதால் திருச்சி சிவா எதையெதையோ பேசிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார். காமராஜரை கருவாட்டுக் காரியின் மகன் என கூறியவர் கருணாநிதி என தெரிவித்தார். மேலும், காமராஜரை எருமை மாடு என பேசியவர் கருணாநிதி என சீமான் கூறினார். கருணாநிதியும், காமராஜரும் தற்போது உயிருடன் இல்லை என்ற நிலையில், இவ்வளவு காலம் விட்டு புது தகவலை திருச்சி சிவா கூறியது பேசுபொருளாகியுள்ளது. மேலும், காங்கிரசை சேர்ந்த பலரும் திருச்சி சிவாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எங்கள் வரலாற்றை மறைப்பதற்கு நீ யார்? திமுக எம்.பி திருச்சி சிவா காட்டம்!!
இதையும் படிங்க: பார்லிமென்டில் கால் பதிக்கும் கமல்.. பதவியேற்பு தேதியை உறுதி செய்த மநீம..!