அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அதிருப்தி குறித்த பேச்சு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பாணி மற்றும் கட்சி உள்ளூர் மாவட்ட அரசியலில் அவரது ஆதரவு முடிவு. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணனுக்கு எடப்பாடி ஆதரவு அளித்ததாகக் கூறப்படுவது, இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
அதிமுகவின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்பதை செங்கோட்டையன் புறக்கணித்து வந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவையும் செங்கோட்டையன் புறக்கணித்தார்.

இருப்பினும் சமீபத்தில் செங்கோட்டையன் கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் தான் மனம் திறந்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சண்டை போட்டுக்காதீங்க! உட்கட்சி பூசல் இருக்கவே கூடாது... அமித்ஷா கறார் உத்தரவு..!
இதனிடையே, அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கோட்டையன் கூட்டணியில் பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என பாஜக எண்ணுவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக தலைமை மீது செங்கோட்டையன் குற்றம் சுமத்துவதை பாஜக விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், செங்கோட்டையனை சமாதானப்படுத்த பாஜக முயற்சிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரெடியா இருந்துக்குங்க! வெடிகுண்டு வீசப்போறேன்!! ராகுல்காந்தி பேச்சால் பீகாரில் வெடித்தது சர்ச்சை!!