சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளின் பிரசவ வார்டுகளில் நீண்டகாலமாக நீடிக்கும் பணம் வசூல் வழக்கம் இன்னும் ஒழியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு சுமார் 9 லட்சம் கர்ப்பிணிகள் பிரசவிப்பதில் 60 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ள நிலையில், பிரசவ சேவைக்கு கட்டாயமாக பணம் கேட்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
கர்ப்ப காலத்தில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் பெண்களிடம், பேனா, பேப்பர் உள்ளிட்ட அடிப்படைப் பொருட்களை வாங்கி வருமாறு நர்சுகளும் பணியாளர்களும் கேட்பது வழக்கமாக உள்ளது.
பிரசவத்தின் போது ஆண் குழந்தை பிறந்தால் 2,000 ரூபாயும், பெண் குழந்தை பிறந்தால் 500 ரூபாயும் வார்டில் பணியாற்றுபவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. பிரசவத்துக்குப் பிறகு இனிப்பு, காரம், காபி வாங்கித் தருமாறும் கேட்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க மாட்டேன்!! ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் மூத்த தலைவர் அடம்!
பொதுமக்கள் கூறுகையில், “விருப்பப்பட்டு கொடுப்பவர்களிடம் பணம் வாங்கிக்கொள்ளட்டும். ஆனால், கொடுக்க முடியாதவர்களிடம் கட்டாயப்படுத்தி கேட்பதும், கொடுக்காதவர்களை இழிவாக நடத்துவதும் தவறு. இப்பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

புகார் தெரிவித்தாலும், செய்திகள் வெளியானாலும் எந்த மாற்றமும் இல்லை. பணம் வசூலிப்பதற்கான ஆணிவேர் யார், அப்பணம் யாருக்கு செல்கிறது என்பதை கண்டறிய யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை” என்றனர்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், “அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைக்கு எந்தக் கட்டணமும் இல்லை. சில பரிசோதனைகள் தவிர, மற்றவற்றுக்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை. யாரேனும் பணம் கேட்டால், அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். அல்லது 104 என்ற உதவி எண்ணில் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
இருப்பினும், புகார் தெரிவித்தால் குறைந்த ஊதியம் பெறும் தூய்மைப் பணியாளர்கள் அல்லது ஒப்பந்த ஊழியர்கள் மட்டுமே பெயரளவில் தண்டிக்கப்படுவதாகவும், உண்மையான பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வங்கதேசம் தான் பிரச்னை! சீனா இல்லை! ஊடுருவல்கள் குறித்து மத்திய அரசு தகவல்!!