தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் பேச்சுக்கள் மற்றும் மத்திய அரசின் புதிய மசோதாக்கள் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து ‘நறுக்கென’ தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். விஜய்யின் அரசியல் நிலைப்பாடு மற்றும் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைகள் குறித்து அவர் எழுப்பிய கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய தமீமுன் அன்சாரி, "திமுக தீய சக்தி, தவெக தூய சக்தியென விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல; அது துடுக்கு மொழி. திமுகவை எந்த அளவிற்கு அவர் விமர்சிக்கிறாரோ, அந்த அளவிற்கு பாஜகவை அவர் விமர்சனம் செய்யவில்லை. விஜய் ஏன் பாஜகவை பார்த்து அச்சப்படுகிறார் என்கிற சந்தேகம் எழுகிறது. முதலில் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நேரடி கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்" என்று ‘பஞ்ச்’ வைத்தார். மேலும், தமிழகத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள SIR (Special Intensive Revision) முறையானது என்.ஆர்.சி (NRC) நடவடிக்கையின் நகல் போன்றது என்றும், பீகாரில் நடந்தது போலவே இங்கும் பல குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய அவர், "மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் பெயரை மாற்றி இருப்பது கண்டனத்திற்குரியது. காந்தி மீது அவர்களுக்கு இருக்கும் தீராத கோபத்தையே இது காட்டுகிறது. 125 நாட்கள் வேலை வழங்கப்படும் எனக்கூறிவிட்டு, இப்போது 60 நாட்கள் இடைநிறுத்தலாம் என மசோதா கொண்டு வருவது ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பதாகும். முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்போது பிரதமர் அவையில் இல்லாமல் வெளிநாட்டிற்குச் செல்வது ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல" என்று தெரிவித்தார். தங்களது கட்சி திமுக கூட்டணியில் நீடிப்பதாகவும், தொகுதிகள் குறித்துத் தலைமை நிர்வாகக் குழு கூடி முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு பதில் சொல்ல டைம் இல்ல… ஈரோட்டில் தவெக ஏற்பாடுகள் பிரம்மாண்டம்! – செங்கோட்டையன்
இதையும் படிங்க: 84 நிபந்தனைகள் ஏன்? இதுவரை இல்லாத கெடுபிடி! - ஈரோடு பொதுக்கூட்ட தேதி மாற்றம்: செங்கோட்டையன் ஆவேசம்!